பல்லடம்: பல்லடம் அருகே, வடுகநாத சுவாமி கோவிலில், தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியை அடுத்து வரும் அஷ்டமி தினம் தேய்பிறை அஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நாள், கால பைரவருக்கு உகந்த தினமாகும். பல்லடம் அடுத்த, கணபதிபாளையம் மலையம்பாளையம் கிராமத்தில் வடுகநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு, மூலவர் வடுகநாத சுவாமியாக காலபைரவர் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், நேற்று தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது. முன்னதாக, பக்தர்கள் பூசணிக்காய் மற்றும் எலுமிச்சை தீபம் ஏற்றி கால பைரவரை வழிபட்டனர். மஞ்சள், இளநீர், தேன், பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் வடுகநாத சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.