பதிவு செய்த நாள்
14
பிப்
2023
03:02
அன்னூர்: சென்னையில் புறப்பட்ட ஆதியோகி ரதம் நேற்றுமுன் தினம் கோவை மாவட்டத்திற்கு வந்தது.
கோவை, வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில், வரும் 18ம் தேதி மகா சிவராத்திரி விழா நடக்கிறது. மகா சிவராத்திரி குறித்தும், அன்று யோக நிலையில் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆதியோகி சிவன் ரதமும், 63 நாயன்மார்கள் வீற்றிருக்கும் ரதமும் கடந்த ஜன. 20ம் தேதி சென்னையில் புறப்பட்டன. இந்த ரதங்கள், செங்கல்பட்டு, செங்கம், திருச்செங்கோடு, சத்தி, புளியம்பட்டி வழியாக நேற்று முன்தினம் கோவை மாவட்டத்திற்குள் நுழைந்தன. மாவட்ட எல்லையான பசூரில் தென் கைலாய பக்தி பேரவை சார்பில் பக்தர்கள் வரவேற்றனர். இதையடுத்து குமாரபாளையம், வட்டமலை ஆண்டவர் கோவிலில், 63 நாயன்மார்களுக்கு அபிஷேக பூஜை நடந்தது. கரியாம்பாளையம், பிள்ளையப்பம்பாளையம், கணேசபுரம், கோவில்பாளையம் வழியாக ரதங்கள் சரவணம்பட்டிக்கு சென்றன. ரதத்துடன் ஆறு பெண் பக்தர்கள் உள்பட 52 சிவாங்கர்கள் பாதயாத்திரையாக வந்தனர். பக்தர்கள் கூறுகையில், வருகிற 17ம் தேதி ஈஷா யோக மையத்தை அடைய உள்ளோம். ஏழு மாவட்டங்களில், 630 கிராமங்களில் சிறப்பு வழிபாடு செய்து, 630 கி.மீ., தூரம் பயணம் செய்கிறோம், என்றனர்.