திருத்தணி: திருத்தணி அடுத்த, வேலஞ்சேரி கிராமத்தில், பழமை வாய்ந்த சர்வ மங்களீஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்தாண்டு முதல் பிரம்மோற்சவம் மற்றும் தெப்ப உற்சவம் நடந்து வருகிறது. அந்த வகையில், இரண்டாம் ஆண்டு சிவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இம்மாதம், 18ம் தேதி சிவராத்திரியை ஒட்டி, மாலை 6:00 மணிக்கு கோவில் எதிரே உள்ள மங்களீஸ்வரர் கோவில் குளத்தில் இரண்டாம் ஆண்டு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இது தவிர நேற்று முன்தினம் முதல், வரும் 18ம் தேதி வரை கோவில் வளாகத்தில், காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன. அதே போல, மாலை 6:00 மணி முதல், இரவு 7:30 மணி வரை தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது. வரும் 18ம் தேதி சிவராத்திரி விழாவையொட்டி, மூலவருக்கு ஐந்து கால அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன. அதை தொடர்ந்து, 19ம் தேதி கோவில் வளாகத்தில் உற்சவர் திருக்கல்யாணத்துடன் நடப்பாண்டிற்கான சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.