பதிவு செய்த நாள்
17
பிப்
2023
06:02
தேவதானப்பட்டி: தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற தேவதானம்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா நாளை முதல் கோலாகலமாக துவங்குகிறது. பக்தர்கள் வசதிக்காக 60 சிறப்புபஸ்கள் இயக்கப்படுகிறது.
தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ., தூரம் மஞ்சளாற்றின் கரையோரம் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட பழமையான கோயில். இங்கு அம்மனுக்கு விக்ரஹம் கிடையாது. மூடப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. பக்தர்கள் மஞ்சளாற்றில் குளித்து கோயிலில் அம்மனை வணங்குவர். தினமும் மாலை 6:00 மணிக்கு உறுமி, சங்கு, சேகண்டிகள் முழங்க நடக்கும் சாயரட்சை லட்சதீபம் பூஜையில் பக்தர்கள் உத்தரவு கேட்பது வழக்கம். தீபாரதனைக்கு முன்பு தேங்காய் உடைக்கப்படுவதில்லை. வாழைப்பழம் உரிக்கப்படுவதும் இல்லை. இரவு, பகல் அணையாத நெய் விளக்கு எரிகின்றது. குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் அம்மனை குல தெய்வமாக நினைத்து ஏராளமான பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.
நாளை திருவிழா துவக்கம்: பிப்., 18 முதல் பிப்ரவரி 25 வரை எட்டு நாட்கள் மாசி மகா சிவராத்திரி திருவிழா கோலாகலமாக நடக்கும். போக்குவரத்து துறை: பெரியகுளத்தில் இருந்து காமாட்சியம்மன் கோயிலுக்கு 20 சிறப்பு பஸ்கள், ஆண்டிபட்டியில் இருந்து காமாட்சியம்மன் கோவிலுக்கு 20 பஸ்கள், வத்தலகுண்டில் இருந்து காமாட்சியம்மன் கோயிலுக்கு 20 பஸ்கள் என 60 சிறப்பு பஸ்களை போக்குவரத்துதுறை இயக்குகிறது. கோயில் வளாகத்தில் தற்காலிக பஸ் டெப்போ அமைக்கப்பட்டுள்ளது. பஸ்கள் அரிசிக்கடை வழியாக கோயிலுக்குச் சென்று, அட்டணம்பட்டி பிரிவு வழியாக வெளியேற வேண்டும். அனைத்து குடிநீர் நிலையலிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், துப்புரவு பணிக்கு 30 தூய்மை பணியாளர்கள் மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்தும், மேலும் தூய்மை பணிக்கு நான்கு மேற்பார்வையாளர்கள் குழு அமைத்து 35 தூய்மை பணியாளர்கள் சுழற்சி முறையில் கழிவறைகளை பராமரிப்பு பணி. தினமும் மூன்று வேளை பிளிசிங் பவுடர், சுண்ணாம்பு போட்டு சுற்றுப்புறத் தூய்மைக்கு ஏற்பாடு உள்ளிட்ட பணிகளை பேரூராட்சி செயல் அலுவலர் விஜயா மேற்பார்வையில் கண்காணிக்கப்படும். திருவிழாவையொட்டி நேற்று முதல் மஞ்சளாற்றில் பக்தர்கள் குளிப்பதற்கு ஏதுவாக மஞ்சளாறு அணையில் இருந்து வினாடிக்கு 40 கன அடி நீர் திறக்கப்பட்டது. தடையில்லா மும்முனை மின்சாரம். 55 சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு, தற்காலிக ஆடை மாற்றும் அறை, கோயில் அருகே புறக்காவல் நிலையம் அமைத்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு. 24 மணிநேரம் தடையில்லா மும்முனை மின்சாரம், வயதில் மூத்த பக்தர்களுக்கு சக்கரவண்டி, வழக்கமாக காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடை திறந்திருக்கும். திருவிழாவையொட்டி காலை 6:00 மணி முதல் இரவு 12:00 மணி வரை நடை திறந்திருக்கும். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் தனராஜ் பாண்டியன், கனகராஜ் பாண்டியன் செயல் அலுவலர் வேலுச்சாமி செய்து வருகின்றனர்.