கள்ளக்குறிச்சியில் திறக்கமுடியாத கோவில் உண்டியல் : திண்டுக்கல் வல்லுனர் மூலம் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21பிப் 2023 12:02
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ஒரு ஆண்டாக திறக்க முடியாமல் இருந்த கோவில் உண்டியல், திண்டுக்கல் பூட்டு வல்லுனர் மூலம் நேற்று திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாசவி மகாலின் பின்புறம், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், களரி முனியப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலின் உண்டியல் நிரம்பியதால் காணிக்கையை கணக்கிட அதிகாரிகள், பூட்டை திறக்க முயன்றனர். ஆனால் எவ்வளவு முயற்சித்தும் பூட்டை திறக்க முடியவில்லை. இந்த நிலை கடந்த ஓராண்டாக இருந்தது. இந்நிலையில், திண்டுக்கல்லில் இருந்து பூட்டு வல்லுனர் நேற்று வரவழைக்கப்பட்டார். இரண்டரை மணிநேரம் போராடி உண்டியல் திறக்கப்பட்டதை தொடர்ந்து, கோவில் வளாகத்திலேயே காணிக்கை எண்ணும் பணி துவங்கியது. இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சங்கர் தலைமையில் அறநிலையத்துறை எறையூர் ஆய்வாளர் புருஷோத்தமன், எழுத்தர் லோகு, உதவியாளர் சசிக்குமார் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 456 ரூபாய் காணிக்கை இருந்தது.