விருத்தாசலம், : விருத்தாசலம் சந்தைதோப்பு அங்காளம்மன் கோவில் மயானகொள்ளை திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம் சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி ரணகளிப்பு உற்சவ திருவிழா ஆண்டுதோறும் நடப்பது வழக்கம்.அதேபோல், நடப்பாண்டு மகா சிவராத்திரி ரணகளிப்பு உற்சவ திருவிழா கடந்த 14ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த 18 ம் தேதி மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, அம்மன் சுய ரூபத்துடன் கோட்டை சென்று நிசாசனி வயிற்றை கிழித்து குடலை பிடுங்கி மாலையாக அணிந்து, குழந்தையை ஏந்தி வரும் ஐதீக நிகழ்ச்சி மற்றும் மகிடாசுரன் காட்சியளிப்பு, குடல் பிடுங்கி மாலை அணிதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு மணிமுத்தா ஆற்றங்கரையில் மயானக்கொள்ளை திருவிழா நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று அங்களபரமேஸ்வரி, தாண்டவராய சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. வரும் 23ம் தேதி செடல் திருவிழா நடக்கிறது.