நரசிங்கப்பெருமாள் கோயிலில் 12ம் நூற்றாண்டு நந்தி கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21பிப் 2023 06:02
கொடைரோடு: அம்மையநாயக்கனூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் 12ம் நூற்றாண்டு நந்தி கிடைத்தது பொதுமக்களுக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் நாயக்கனூர் கதலி நரசிம்ம பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக புணரமைப்பு பணிகள் எட்டு மாதங்களாக நடந்து வருகிறது. நேற்று கோயிலின் வடகிழக்கு மூலையில் பைரவர் சன்னதி அருகே தோண்டிய போது பெரும்பாறையில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட நந்தி கிடைத்தது. கிராமத்தினர் நந்தியை ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நன்றியை கோயிலுக்குள் பாதுகாப்பாக வைத்துள்ளனர். பெருமாள் கோயில் நந்தி எப்படி கிடைத்தது என்ற கேள்வியை சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரி பேராசிரியர் கண்ணனிடம் கேட்டபோது," நந்தியின் உருவ அமைப்பு அளவில் சிறியதாகவும் அதன் கொம்பு கட்டையாக, முகம், திமில் சிறியதாகவும், ஒரு வரிசை மணி கழுத்தில் அணிந்து அதிக ஒப்பனை இல்லாமல் உள்ளது. இந்த சிற்பப் பாணியை அடிப்படையாகக் கொண்டு இதன் காலம் பிற்கால பாண்டியர் காலமாகிய 12, 13ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். பிற்கால பாண்டியர்களின் துண்டு கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளதால் இது உறுதிப்படுத்தப்படுகிறது. பாண்டியர் காலத்திற்குப் பிறகு நாயக்கர்கள் ஆட்சியில் சிவன் கோயில் அழிக்கப்பட்டு பெருமாள் கோவில் உருவாக்கப்பட்டு உள்ளது" என்றார்.