பதிவு செய்த நாள்
22
பிப்
2023
12:02
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்: அ.மீனாட்சி சுந்தரம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பின் போதும், கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, இம்மாதம், 14ம் தேதி நடை திறக்கப்பட்டதும், ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக அங்கு சென்றனர். அதேபோல, நானும், என் நண்பர்கள் சிலரும் அங்கு செல்ல திட்டமிட்டோம். காலை, 8:30 மணி அளவில் பம்பையில் இறங்கி புனித நீராட முற்பட்டால், அங்கு பெரிய அளவில் தண்ணீர் ஓடவில்லை.
ஒன்றிரண்டு அடி உயரத்திற்கு மட்டுமே ஓடிய சிறிய அளவு நீரில் தான், கோவிலுக்கு செல்லும் அத்தனை பேரும் குளிக்க வேண்டும்; வேறு வசதி, வழி ஏதும் கிடையாது. அங்குள்ள கழிப்பறைகள் பெயரளவுக்கு தான் இருக்கின்றனவே அன்றி, சுத்தம் என்பது அறவே கிடையாது.
சபரிமலைக்கு செல்பவர்கள் மிகவும் புனிதமாக கருதும், இருமுடி கட்டுவதில் துவங்கி, சுவாமி தரிசனம் வரை ஏகப்பட்ட குளறுபடிகள், குழப்பங்கள், சுத்தமின்மை, பக்தர்கள் வஞ்சிக்கப்பட்டதை கண்கூடாக பார்த்தோம்.
பம்பையில் இருமுடி கட்டும் இடத்தில், 300 ரூபாய் கொடுத்து, சீட்டு வாங்கி, முட்டி மோதி தேங்காய் பெற்று, அதனுள் நெய் ஊற்றி, இருமுடி கட்டி முடிப்பதற்குள், போதும் போதும் என்றாகி விட்டது. எங்கும், ஒழுங்கு, கியூ என்பதே கிடையாது. அவ்வளவு சிரமப்பட்டு, தலையில் வைத்து எடுத்துச் செல்லப்படும், இருமுடி கட்டில் உள்ள தேங்காயில் இருக்கும் நெய், மொத்தமாக சேகரித்து, அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படாமல், கோவில் வளாகத்தில் ஒதுக்குபுறமான இடத்தில் கொட்டப்படுகிறது. தலையில் சுமந்து சென்ற பூஜை பொருட்கள், ஆங்காங்கே விசிறியடிக்கப்படுகின்றன. சுவாமியை கும்பிட்டு திரும்பினால், விபூதி, சந்தனம் கொடுக்கக் கூட முறையான வசதிகள் இல்லை.
கழுதைப் பாதை என்றழைக்கப்படும், டிராக்டர் மட்டுமே செல்லும், கிடுகிடு உயர பாதையில் மலை மேல், 7 கி.மீ., நடந்து செல்ல வேண்டும் அல்லது டோலி எனப்படும், ஆட்களால் சுமந்து செல்லப்பட வேண்டும். அவ்வளவு சிரமமான பயணம். அடிவாரத்திலிருந்து மலை மேலே செல்லும் இடங்களில், பக்தர்கள் தங்கிச் செல்ல மண்டபங்கள் கிடையாது; இருக்கை வசதி கூட இல்லை. முறையான கழிப்பறை வசதி கிடையாது; அவசர சிகிச்சைக்கும் வசதிகள் இல்லை. சன்னிதானத்தை சுற்றிய பகுதிகள் முழுதும் ஆங்காங்கே குப்பை குவிந்து கிடந்தது.
சென்னையில் மகாலிங்கபுரம், அண்ணா நகரில் உள்ள அய்யப்பா சேவா சங்கங்களால் நிர்வகிக்கப்படும் அய்யப்பன் கோவில்கள், அவ்வளவு சுத்தமாக பராமரிக்கப்படுகின்றன. அவற்றுடன் சபரிமலை அய்யப்பன் கோவில் பராமரிப்பை ஒப்பிடவே முடியாது; அவ்வளவு மோசமாக இருந்தது. ஆனால், சபரிமலையில் வீற்றிருக்கும் அய்யப்பன் அருள் நிறைந்தவராக இருக்கிறார். அதனால் தான் பக்தர்கள், திரும்பத் திரும்ப செல்கின்றனரோ என்று எண்ணத்தோன்றுகிறது! சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவசம் போர்டு தங்களின் ஆட்களை, ஒரு வாரத்திற்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு அனுப்பி, அங்கு பக்தர்களுக்கு செய்யப்படும் வசதிகள் குறித்தும், அங்கு பராமரிக்கப்படும் சுத்தம், சுகாதாரம் குறித்தும், பயிற்சி எடுக்கச் செய்தால் நன்றாக இருக்கும்.