பதிவு செய்த நாள்
22
பிப்
2023
06:02
தஞ்சாவூர்: கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் சுவாமி தேர் 60 லட்சம் ரூபாய் மதிப்பில், புதுப்பிக்கப்பட்ட வெள்ளோட்டம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோவில், திருத்தேர் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலானதால் தேரின் அனைத்து பகுதிகளும் சிதிலமடைந்து, தேரோட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பக்தர்கள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஹிந்து சமய அறநிலையத்துறையின் கோவில் நிர்வாகம், ஸ்ரீ காஞ்சிபுரம் காஞ்சி காமகோடி பீடம், மற்றும் உபயதாரர்கள் மூலம், 60 லட்சம் ரூபாய் மதிப்பில், சுவாமிக்கு புதிய திருத்தேர் கட்டுமானப்பணிகள் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் துவங்கப்பட்டது. சுமார் 250 டன் எடையில், 28 அடி உயரத்தில், 16அடி அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் மாசி மகத் திருவிழாவின் போது தேரோட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்ட நிலையில் வெள்ளோட்டம் நடந்தது. முன்னதாக காலை தேருக்குச் சிறப்பு யாகமும், பூஜைகளும் நடைபெற்றது. தொடர்ந்து பூர்ணாஹூதி முடிந்து புதிய தேருக்கு மேல் கலசஸ்தாபனம் செய்யப்பட்டு, ஏராளமான பக்தர்கள் கும்பேஸ்வரா கும்பேஸ்வரா என தேரை இழுத்துச் சென்றனர். தொடர்ந்து வரும் மார்ச் 4 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெறவுள்ள ஐந்து தேரோட்டத்தின் போது, 5 தேருக்கும் 8 லட்சம் ரூபாய் மதிப்பில், சுவாமி மற்றும் அம்மன் தேருக்கு 13 இன்ச் சுற்றளவில், 300 மீட்டர் நீளத்திலும், மீதமுள்ள 3 தேருக்கு 9 இன்ச் சுற்றளவில், 200 மீட்டர் நீளத்தில் நைலானில், சென்னையில் தயாரிக்கப்பட்ட புதிய தேரிழுக்கும் வடம் உபயதாரர் மூலம் வழங்கப்படவுள்ளது. கும்பகோணம் எம்.எல்.ஏ., அன்பழகன், மங்களாம்பிகா கைங்கர்ய சபா நிர்வாகிகள், அறநிலையத்துறை இணை கமிஷனர் மோகன சுந்தரம், உதவி கமிஷனர் (பொறுப்பு) கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.