காரைக்குடி: காரைக்குடி கழனிவாசல் காமாட்சி அம்மன் கோயில் பூத்திருவிழா விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கழனிவாசல் காளையப்பா நகரில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் 18 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா கடந்த பிப்.14 ஆம் தேதி கணபதி ஹோமம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தினமும் மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. இன்று காலை, வாட்டர் டேங்க் சிவசக்தி விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பறவைக் காவடி, அக்னிச்சட்டி எடுத்தும், வேல் குத்தியும் காமாட்சி அம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து கோயில் முன்பு, பக்தர்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் கொண்டு வந்த பால்குடங்கள மூலம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.