பதிவு செய்த நாள்
24
பிப்
2023
12:02
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்துள்ள, ராமவர்மபுரம்புதுார் மாகாளியம்மன் கோவில் திருவிழாவில் இன்று சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
பொள்ளாச்சி அடுத்துள்ள நடுப்புணி, ஆர்.வி.புதுார் (ராமவர்மபுரம்புதுார்) மாகாளியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 10ம் தேதி துவங்கியது. பக்தர்கள் விநாயகர் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா களைகட்டியது. கடந்த, 14ம் தேதி திருவிழா சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், கும்பம், கம்பம் நிறைக்க ஆற்றங்கரை புறப்படுதல், சக்தி பூவோடு எடுத்து கோவில் வலம் வருதல், மாகாளியம்மனுக்கு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் பக்தர்கள் சீர்த்தட்டு, மாவிளக்கு எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். அதன்பின், ஆற்றங்கரையில் இருந்து பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு மஞ்சள் நீராட ஊர்வலம் செல்லுதல், இரவு, 9:00 மணிக்கு கும்பம், கம்பம், பூவோடு முதலியன கங்கையில் விடுதல், அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார வழிபாடு, தாலாட்டு, தீபாராதனையும் நடந்தது. இன்று காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.