பதிவு செய்த நாள்
26
பிப்
2023
08:02
அன்னூர்: கிருத்திகையை முன்னிட்டு, அன்னூர் வட்டாரத்தில், முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
அன்னூர், மன்னீஸ்வரர் கோவிலில், முருகப்பெருமான் சன்னதியில், இன்று காலை 11:00 மணிக்கு, அபிஷேக பூஜை நடந்தது. இதையடுத்து, வெள்ளி கவசம் சாற்றப்பட்டு, முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன், அருள்பாலித்தார். மாலையில் தங்கத்தகடு பொருத்தப்பட்ட சிறிய தேரில், முருகப்பெருமான் கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். குன்னத்தூரில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில், அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. குமார பாளையத்தில் உள்ள பழமையான வட்டமலை ஆண்டவர் கோவிலில் மதியம் சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். எல்லப்பாளையம், பழனிஆண்டவர் கோவில், கோவில்பாளையம் கால காலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.