பதிவு செய்த நாள்
27
பிப்
2023
01:02
ஆனைமலை: ஆனைமலை தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில், குண்டம் தேர்த்திருவிழாவில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
ஆனைமலை தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில், குண்டம் தேர்த்திருவிழா கடந்த, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று, தர்மராஜா திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. உற்சவ மூர்த்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி கண்ணபிரான் முன்னிலையில், விநாயகப்பெருமான் ஆசியுடன், தர்மராஜா, திரவுபதி அம்மன் திருமண மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, ஹோம பூஜைகள் நடைபெற்றன. அதன்பின், திருக்கல்யாண உற்சவமும், பூச்செண்டு மற்றும் தேங்காய் உருட்டுதல் போன்ற வைபவங்கள் நடைபெற்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், திருக்கல்யாண உற்சவத்தை கண்டுகளித்தனர். வரும், 3ம் தேதி கண்ணபிரான் துாது, சுவாமி புறப்பாடு, குண்டத்துக்காட்டில் விஸ்வரூப தரிசனம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 6ம் தேதி அம்மன் ஆபரணம் பூணுதல், ஊர்வலம், அரவான் சிசு ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து, 7ம் தேதி அலங்கார பெரிய திருத்தேர் வடம் பிடித்தல், குண்டம் பூ வளர்த்தல் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. 8ம் தேதி குண்டம் பூவில் இறங்குதல், திருத்தேர் ஊர்வலம்; 9ம் தேதி திருத்தேர் நிலை நிறுத்தல், ஊஞ்சல், பட்டாபிேஷகம் நடக்கிறது. 10ம்தேதி மஞ்சள் நீராடுதல், போர் மன்னன்காவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.