பதிவு செய்த நாள்
27
பிப்
2023
02:02
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோற்சவ பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் நித்ய நான்குகால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதுதவிர கந்தசஷ்டி, மாசி பிரம்மோற்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன. அந்த வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்தாண்டு பிரம்மோற்சவ பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவில் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் கொடி ஏற்றப்பட்டது. அதிகாலை 4:00 மணியளவில், கோவில் வட்ட மண்டபத்தில் உற்சவர் கந்தசுவாமி பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின், கொடி மரம், கொடி உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடந்தன. அதைத் தொடர்ந்து, பக்தர்களின் கந்தா, சரவணா, அரகரா கோஷத்துடன் அதிகாலை 5:00 மணிக்கு உற்சவ கொடி ஏற்றப்பட்டது. பின், உற்சவர் கந்தசுவாமி பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் லட்சுமிகாந்தன் பாரதிதாசன், செயல் அலுவலர் வெங்கடேசன், மேலாளர் வெற்றிவேல் செய்திருந்தனர். இதுபோல தாழம்பூர் ஊராட்சியில், திரிசக்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஞானசக்தியாக சரஸ்வதி தேவியும், இச்சா சக்தியாக லட்சுமி தேவியும், கிரியா சக்தியாக தாய் மூகாம்பிகையும் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும். இக்கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவம் விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.