ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில் மாசி மக உற்சவ கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2023 01:02
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் மாசி மக உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
பூவராகசுவாமி கோவில் மாசி மக உற்சவம் 23 நாட் களுக்கு நடைபெறும்.இந்த ஆண்டு மாசி மக உற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி மூலவர் பெருமாள், அம்புஜவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. உற்சவம் நடக்கும் அனைத்து நாட்களும் தினமும் சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சிகளாக நாளை (1ம் தேதி) இரவு தங்க கருட சேவை, 3ம் தேதி அனுமந்த வாகனம், 4ம் தேதி யானை வாகனத்திலும் வீதியுலா நடக்கிறது. வரும் 5ம் தேதி அதிகாலை ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து கிள்ளை சமுத்திர தீர்த்தவாரிக்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது. 6ம் தேதி அதிகாலை சேத்தியா தோப்பு தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் உற்சவமும், 7ம் தேதி கிள்ளை கடற்கரையில் சமுத்திர தீர்த்தவாரியும் நடக்கிறது. தொடர்ந்து 8ம் தேதி மகத்து வாழ்க்கை மண்டகப்படி, 12ம் தேதி புவன கிரியில் முத்துப்பல்லக்கில் வீதியுலா, 13ம் தேதி சிறப்பு திருமஞ்சனமும் நடக்கிறது. 14ம் தேதி குமாரகுடி, கானூர் வழியாக பாளையங் கோட்டை, ராமாபுரம் கிராமங்களில் உற்சவம் நடந்த பின்னர் மார்ச் 19ம் தேதி ஸ்ரீமுஷ்ணம் எல்லைக்கு வந்து சேருகிறார். எல்லையில் சுவாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. மார்ச் 21 ம் தேதி கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் மாலா, செயல் அலுவலர் செல்வமணி மற்றும் முக்கிய பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.