பதிவு செய்த நாள்
28
பிப்
2023
04:02
தஞ்சாவூர்; கும்பகோணத்தில், மாசிமக பெருவிழாவை முன்னிட்டு, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், 63 நாயன்மார்களின் இரட்டை வீதியுலா நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மாசிமக பெருவிழாவுக்காக, மகமகத்திற்கு முதன்மையான ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளிட்ட ஆறு சிவாலயங்கள் கடந்த பிப்.25ம் தேதி கொடியேற்றப்பட்டு பத்து நாட்கள் உற்வசம் துவங்கியது. இதையடுத்து, ஆதிகும்பஸ்வரர் கோவிலில், தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்து வருகிறது. தொடர்ந்து, காலை வெள்ளிப்பல்லக்கில் விநாயகர், சுப்ரமணியர், ஆதிகும்பேஸ்வரர், மங்களம்பிகை அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். பின்னர், கோவிலில் அப்பர், சுந்தரர், மாணி்க்கவாசகர், திருநாவுக்கரசர் உள்ளிட்ட 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, படிச்சட்டங்களில் 63 நாயன்மார்களின் உற்சவர்கள் இரட்டை வீதியுலா நடந்தது. அப்போது கோயில் யானை மங்களம் முன்னே செல்ல, திருக்குடந்தை சிவனடியார் திருக்கூட்ட தலைவர் நடராஜன் தலைமையில், பக்தர்கள் தேவார திருமுறைகள் பாடி சென்றனர். மார்ச் 1ம் தேதி தன்னைத்தான் பூஜித்தல் மற்றும் ஓலை சப்பரத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடு, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தேரோட்டமும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசிமக தீர்த்தவாரி வைபவம் வரும் மார்ச்.6ம் தேதி நடக்கிறது. அப்போது 12 சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள், மகாமக குளத்தின் கரைகளில் எழுந்தருளி காட்சியளிக்கின்றனர்.