பதிவு செய்த நாள்
03
மார்
2023
02:03
பேரூர்: பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில் உள்ள சாந்தலிங்க பெருமான் மற்றும் அம்பலவாணர் கோவில் கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடந்தது.
தமிழகத்தின் மிகவும் பழமையான மடங்களில் ஒன்றாகவும், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருமடமான பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில், அம்பலவாணர் மற்றும் ஆதிகுரு முதல்வர் சாந்தலிங்க பெருமான் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, பிப்., 23ம் தேதி, வேள்வி வழிபாட்டுன் துவங்கியது. நாள்தோறும் காலை முதல் மாலை வரை பன்னிரு திருமுறை முற்றோதல் நடந்தது. கடந்த, 27ம் தேதி, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இருந்து முளைப்பாலிகை மற்றும் புனித நீர் எடுத்துவரப்பட்டது. 28ம் தேதி, மூத்த பிள்ளையார் வேள்வி, காப்பு கட்டுதல் நடந்தது. கடந்த, மார்ச் 1ம் தேதி, முப்பெரும் தேவியர் வேள்வி, முதற்கால வேள்வி நடந்தது. நேற்று இரண்டாம் கால வேள்வி மற்றும் மூன்றாம் கால வேள்வி நடக்கிறது. இன்று அதிகாலை, 4:00 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி, ஆனைந்து ஆட்டி காப்பணிவித்தல் நடந்தது. தொடர்ந்து, நான்காம் கால வேள்வி, திருமுனை விண்ணப்பம், பேரொளி வழிபாடு நடந்தது. காலை, 8:00 மணிக்கு, கலச புறப்பாடு நடந்தது. காலை, 8:20 மணிக்கு, பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில், விமான கோபுரங்களுக்கும், அம்பலவாணர் மற்றும் சாந்தலிங்க பெருமானுக்கும், ராஜ கோபுரத்திற்கும், மகா கும்பாபிஷேகம் நடந்தது. இவ்விழாவில், பல்வேறு ஆதீனங்களும், சிவாச்சாரியார்களும், பக்தர்கள் கலந்து கொண்டனர்.