பதிவு செய்த நாள்
07
மார்
2023
11:03
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மாசி மக பிரம்மோற்சவ பெருவிழா, கடந்த 10 தினங்களாக நடத்தப்படுகிறது. நேற்று, 10ம் நாள் உற்சவமாக, தெப்பத்திருவிழா நடந்தது. இதில், இரவு 8:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் கந்தசுவாமி வள்ளி, தெய்வானையருடன் எழுந்தருளி, சரவண பொய்கையில் ஐந்து முறை வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் படிக்கட்டுகளில் கற்பூரம், தீபங்களை வெற்றிலையில் ஏற்றி வரவேற்றனர். முன்னதாக, மதியம் 1:00 மணியளவில், கந்தசுவாமி, வெள்ளித்தொட்டி உற்சவ வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் மாட வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், மாலை 3:30 மணியளவில், கந்தசுவாமி சரவண பொய்கையில் எழுந்தருளி தீர்த்தவாரியாடினார். இதேபோன்று, கேளம்பாக்கம் அடுத்த கொளத்துாரில் உள்ள கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோவிலிலும், மாசி மக விழா நேற்று நடந்தது. விழாவை ஒட்டி, கல்யாண ரங்கநாதர் பூதேவி, ஸ்ரீதேவி மற்றும் ரங்கநாயகி தாயார் ஆகியோருக்கு, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மலர் அலங்காரத்தில், ரங்கநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:30 மணியளவில், கல்யாண ரங்கநாதர் பூதேவி, ஸ்ரீதேவி தாயாருடன் தெப்பல் குளத்தில் எழுந்தருளி,ஒன்பது முறை வலம்வந்தார்.
முக்தீஸ்வரர் கோவில் செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் கிராமத்தில், முக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், மாசி மகத்தையொட்டி, பவுர்ணமி நாளில் தீர்த்தவாரி நடைபெறும். இந்த ஆண்டு, மாசி மகத்தையொட்டி, நேற்று, பஞ்சமூர்த்திகளுக்கு மஹா அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து, அஸ்திர தேவர், திருகுளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. அதன்பின், குளத்தில் பக்தர்கள் நீராடி, முக்தீஸ்வரரை வழிபட்டனர். இவ்விழாவில், ஆத்துார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.
காசி விஸ்வநாதர் கோவில்: சோத்துப்பாக்கம் அடுத்த கீழ்மருவத்துாரில், காளீஸ்வரி, காசி விஸ்வநாதர் கோவிலில் மாசி மகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி, நந்தியம்பெருமானுக்கும், காசி விஸ்வநாதருக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. சிவலிங்கத்திற்கு பக்தர்கள், தங்கள் கைகளாலேயே பாலாபிஷேகம் செய்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, சிவலிங்கத்தை வழிபட்டனர். அதன் பின், பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
மூன்று ஆண்டுகளுக்குப் பின் இன்று மாசி மக உற்சவம்: கடப்பாக்கம் அருகே ஆலம்பரைகுப்பம் கடற்கரை பகுதியில், மாசி மாதத்தின் பவுர்ணமி நாளான மாசி மகத்தன்று, பல ஆண்டுகளாக தீர்த்தவாரி உற்சவம் நடந்து வருகிறது.கடப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளான விளம்பூர், கரும்பாக்கம், கோட்டைக்காடு, கடுக்களூர், வில்லிப்பாக்கம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கோவில்களிலிருந்து, சுவாமிகள் சிறப்பு அலங்காரத்துடன் கடற்கரைப் பகுதிக்கு வந்து, நீராடி தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடக்கும்.கடந்த 2020ம் ஆண்டு, உள்ளூர் பிரச்னை காரணமாக, மாசி மக உற்சவம் நடத்த போலீசார் அனுமதி வழங்க மறுத்ததால் நிறுத்தப்பட்டது.இதையடுத்து, 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.எனவே, கடந்த மூன்று ஆண்டுகளாக, கடப்பாக்கத்தில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடைபெறவில்லை.மூன்று வருடங்களுக்குப் பின், மாசி மக உற்சவம் கடப்பாக்கம் கடற்கரை பகுதியில், இன்று நடைபெறஉள்ளது.உற்சவத்திற்காக கடற்கரை ஓரத்தில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வரும் சுவாமிகள், கடற்கரை நோக்கி நிறுத்தப்பட்டு, நீராடுவதற்காக பந்தல் அமைக்கும் பணி நடைபெறுகிறது.மேலும், கடற்கரைப் பகுதியில் துாய்மைப்படுத்தும் பணியில், இடைக்கழிநாடு பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று ஆண்டுகளுக்குப் பின் உற்சவம் நடைபெற உள்ளதால், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.