பதிவு செய்த நாள்
07
மார்
2023
11:03
அவிநாசி: அவிநாசி அடுத்த தேவராயம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் 99 ம் ஆண்டு தேர்விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அவிநாசி அடுத்த தேவராயம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் 99ம் ஆண்டு தேர் விழா,கடந்த மாதம் 28ம் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அபிஷேக ஆராதனை, சாமி திருவீதி உலா வருதல், திருவிளக்கு பூஜை, தீர்த்தக்காவடி,ரிஷப வாகன காட்சி, படைக்கலம் எடுத்தல், அம்மை அழைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தேர்விழாவை முன்னிட்டு நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று விநாயகருக்கு 108 குடம் பால் அபிஷேகம், கோ பூஜை நடைபெற்று ஸ்ரீ காமாட்சி அம்மன் தேருக்கு எழுந்தருளல் நடைபெற்றது. தேர்விழாவில்,50ம் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் வழிபாடு செய்தனர். நேற்று மாலை அவிநாசி திருப்புக் கொளியூர் ஆதீனம் வாகீசர் மடாலயம் காமாட்சி தாச சாமிகள் தலைமையில், பக்தர்கள் தேர் வடம் பிடித்து திருவீதி உலா வந்தது. இன்று வண்டித்தாரை பரிவேட்டை, சாமி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும், நாளை மஹி தரிசனம் மஞ்சள் நீராடல் நடைபெறுகின்றது. வியாழன் அன்று முத்துக்குமாரசாமிக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகளுடன் விழா நிறைவு பெறுகின்றது. தேர் விழா நாட்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.