நிலக்கோட்டை: நிலக்கோட்டை மணியக்காரன்பட்டியில் உள்ள கருப்பணசாமி கோயில் திருவிழாவில் பாரிவேட்டை நிகழ்வு நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விழாவில் 21 தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். மண்பானையில் சுடச்சுட சமைக்கப்பட்ட உணவுகளை மஞ்சள் துணியில் கட்டி வேட்டைக்கு புறப்பட்டனர். மணியகாரன் பட்டியலில் இருந்து அருவாள் சாட்டையுடன் ஊர்வலமாக ஆடி பாரிவேட்டைக்கு சென்றவர்களுடன் பக்தர்களும் வந்தனர். கிராமத்தின் அருகே உள்ள தெப்பத்தில் கோயில் வீட்டிலிருந்து எடுத்துவரப்பட்ட வில்லிலிருந்து அம்பு எய்து பாரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதனைத் தொடர்ந்து சமைத்து எடுத்துவரப்பட்ட உணவுகளை பக்தர்கள் பிரசாதமாக பெற்றுச் சென்றனர். தெய்வத்திடமிருந்து ஒரு பருக்கையாவது கிடைக்காதா என கிராமத்தினர் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.