பதிவு செய்த நாள்
08
மார்
2023
11:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மாசி மாத பவுர்ணமியையொட்டி பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்று, ஐந்து மணி நேரம் வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில், மலையையே சிவனாக வழிபடுவதால், அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறமுள்ள அண்ணாமலையார் மலையை சுற்றி, பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். மாசி மாத பவுர்ணமி திதி நேற்று முன்தினம் மாலை, 5:39 மணிக்கு தொடங்கி, நேற்றிரவு, 7:14 மணி வரை இருந்ததால், பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய கிரிவலம் சென்ற நிலையில், நேற்று வெயிலையும் பொருட்படுத்தாமல், பகலிலும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோவிலில், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்ய, இலவச தரிசனம் மற்றும், 50 ரூபாய் கட்டண தரிசனத்திற்கும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதில், இலவச தரிசனம் காண, ஐந்து மணி நேரமும், 50 ரூபாய் கட்டண டிக்கெட் தரிசனத்திற்கு, நான்கு மணி நேரமும் நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அருணாசலேஸ்வரர் கோவிலினுள் செல்ல முடியாத பக்தர்கள், ராஜகோபுரம் எதிரிலுள்ள, 16 கால் மண்டபத்தின் எதிரில், கற்பூரம் ஏற்றியும், கிரிவலப்பாதையிலுள்ள அஷ்டலிங்க கோவில்களிலும், நீண்டவரிசையில் நின்றும், சுவாமி தரிசனம் செய்தனர்.