பதிவு செய்த நாள்
09
மார்
2023
11:03
திருச்செந்தூர்: திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா 11ம் திருவிழாவான நேற்று, முன் தினம் இரவு தெப்ப உற்சவம் நடந்தது.
திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மாசித் திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில் தினமும் காலை மற்றும் இரவு, சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி ரத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. 11ம் திருவிழாவான நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு சிவன் கோயிலிலிருந்து சுவாமி, அம்பாள் தனிதனிச் சப்பரத்தில் எழுந்தருளி யாதவர் மண்டகப்படி சென்றனர். அங்கு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. பின்னர் இரவு 7:00 மணிக்கு சுவாமி, அம்பாள் புஷ்ப ரத்தில் யாதவ மண்டகப்படியிலிருந்து எழுந்தருளி , வெளி வீதி வழியாக தெப்பக்குளத்தில் உள்ள திருநெல்வேலி ரத்தார் மண்டகப்படி சென்றார். அங்கு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு 11:00 மணிக்கு, தெப்பத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளியதும் தெப்ப உற்சவம் துவங்கியது. தெப்பத்தில் 11 முறை வலம் வந்து சுவாமி, அம்பாள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் 12ம் திருவிழாவை முன்னிட்டு, நேற்று மாலை 4:30 மணிக்கு சுவாமி , அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்தில் 8 வீதிகளில் உலா வந்து, 14 ஊர் செங்குந்த முதலியார் மண்டபம் சென்றனர். அங்கு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு 9:00 மணிக்கு சுவாமி. அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோயிலை சேர்ந்தார். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் , இணை ஆணையர் கார்த்திக் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.