சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே குரும்பபட்டி பெரிய காண்டி அம்மன் கோவில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் வினோத வழிபாடு நடந்தது.
கூவனூத்து ஊராட்சி குரும்பபட்டியில் உள்ள பெரிய காண்டி அம்மன் கோவில் உற்சவ விழா நேற்று நடந்தது. முன்னதாக கிராம தேவதைகளுக்கு கனி வைத்தல், கருப்பண்ணசாமி கோவிலில் சிறப்பு பூஜையும் நடந்தது. தொடர்ந்து பூஞ்சோலையில் இருந்து அம்பாள் கரகம் பாவித்து மேளதாளம் முழங்க பெரிய காண்டி அம்மன் கோவிலுக்கு வந்தனர். பின் கோவிலில் மகா நெய் தீப பூஜைகள் நடந்தது. நெய் தீபம் ஏற்றிய சிறிது நேரத்தில் கருட பகவான் வானத்தில் வட்டமிட்டது. அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா, கோவிந்தா என கோசமிட்டனர். அதனைத் தொடர்ந்து கோயில் முன் வரிசையாக அமர்ந்திருந்த பக்தர்கள் தலையில் பூசாரி ஆக்ரோஷமாக தலையில் தேங்காய் உடைத்தனர். இதில் ஆண்கள், பெண்கள் முதியவர்கள் என 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி சத்தியராஜ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.