சோமனூர்: ராமாச்சியம்பாளையம் மாகாளி அம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சோமனூர் அடுத்த ராமாச்சியம்பாளையம் மாகாளி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, கடந்த, பிப்., 21 ம்தேதி பூச்சாட்டுதலுடன் திருக்கல்யாண உற்சவம் மற்றும் பொங்கல் விழா துவங்கியது. கடந்த, 28 ம்தேதி அக்னி கம்பம் நடப்பட்டது. பக்தர்கள் தினமும் கம்பம் சுற்றி ஆடினர். கடந்த, 6 ம்தேதி விநாயகர் மற்றும் கருப்பராயன் பொங்கல் வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை அம்மை அழைத்தல், மாவிளக்கு எடுத்தலும் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்தனர். அபிஷேக, அலங்கார பூஜைக்குப் பின் பகத்ரகளுக்கு அம்மன் அருள்பாலித்தார். கோவை, திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். 100 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி கொடுத்து, பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மாலை கம்பம் எடுக்கப்பட்டது. இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.