பதிவு செய்த நாள்
09
மார்
2023
11:03
கடலுார் : கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் 2ம் நாள் மாசிமக தீர்த்தவாரியில் 50க்கும் மேற்பட்ட சுவாமிகள் எழுந்தருளின. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்றனர்.
கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நேற்று 2ம் நாள் மாசிமக தீர்த்தவாரி நடந்தது. கடலுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கடலுாரையொட்டிய புதுச்சேரி மாநில பகுதிகளில் இருந்தும் சுமார் 50க்கும் மேற்பட்ட சாமிகள் சாமிகள் அலங்கரித்து ஊர்வலமாக கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டன. அங்கு, சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. பின்னர், பக்தர்கள் தரிசனத்திற்காக கடற்கரையில் வரிசையாக எழுந்தருளச் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கடலில் நீராடி சாமி தரிசனம் செய்தனர். கடலுார் புதுப்பாளையம் செங்கமலவல்லி தாயார் சமேத ராஜகேபால சுவாமி, திருவந்திபுரம் தேவநாதசாமியுடன் மாசிமக தீர்த்தவாரியில் எழுந்தருளினார். தீர்த்தவாரி முடிந்து, புதுப்பாளையம் கோவிலில் எழுந்தருளிய தேவநாதசாமி மற்றும் ராஜகோபாலசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அங்கு, சுவாமிகள் பத்தி உலாத்தல் வைபவம் நடந்தது. திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் விநாயகர், சந்திரசேகர், மனோன்மணி அம்மன், அஸ்த்ரதேவர் ஆகிய உற்சவ மூர்த்திகள் காலை 6:00 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு புதுப்பாளையம் வழியாக தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு சென்றதும், அங்கு காலை 8:00 மணி அளவில் தீர்த்தவாரி நடந்தது. பின்னர் உற்சவ மூர்த்திகள் அங்கிருந்து புறப்பட்டு புதுப்பாளையம் மாசிமக மண்டகப்படி கட்டிடத்தில் எழுந்தளினர். மாலை 4:00 மணியளவில் புதுப்பாளையம் பகுதியில் வீதியுலா, இரவு திருப்பாதிரிப்புலியூர் ராஜவீதி உலா நடந்தது. இதே போன்று, திருப்பாதிரிபுலியூர் வரதராஜ பெருமாள், மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள், திருமாணிக்குழி முத்துமாரியம்மன், தேவனாம்பட்டினம் பண்ணாரி அம்மன் மற்றும் புதுச்சேரி மாநிலம் பாகூர் மூலநாதர், மதிகிருஷ்ணாபுரம் பட்டாபிராமன் என, ஏராளமான சாமிகள் தீர்த்த வாரியில் எழுந்தருளின. கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை முதல் சில்வர் பீச் வரை பொதுமக்கள் புனித நீராடினர். விழாவையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க எஸ்.பி., ராஜாராம் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சைக்கிளில் வந்த சாமி: கடலுார் முதுநகர் சுப்பாய் தெருவில் உள்ள மேலனுர் மாரியம்மன், சைக்கிளில் அமர்ந்திருப்பதுபோல் அலங்காரம் செய்து, தேவனாம்பட்டினம் மாசிமக தீர்த்தவாரியி்ல் எழுந்தருளினார். சுற்றுச்சூழலை வலியுறுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சைக்கிள் அலங்காரத்தி்ல் எழுந்தருளியதாக தெரிவிக்கப்பட்டது.