பதிவு செய்த நாள்
14
மார்
2023
08:03
அவிநாசி: அவிநாசியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில்,கருணாம்பிகை அம்மன் சன்னதியின் முன் 5 நிலை ராஜகோபுரத்திற்கு பாலாலயம் நடைபெற்றது.
தமிழகத்தின் புகழ்பெற்ற மூன்றாவது பெரிய தேரும்,சுந்தரமூர்த்தி நாயனாரால்,பாடல் பெற்ற தலமாகவும்,கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இத்திருத்தலத்தில்,கும்பாபிஷேகம் நடைபெற்று 14 வருடங்கள் ஆகிறது. தற்போது கும்பாபிஷேக திருப்பணிகளில் ஆரம்ப கால மராமத்து பணிகள் நடைபெற துவங்கியுள்ளது. முன்னதாக அரசுமரத்து விநாயகருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பாலாலயமும்,தாமரை குளக்கரையில் அமைந்துள்ள சுந்தரமூர்த்தி நாயனார் கோவிலில் திருப்பணிகளுக்கான பாலாலய பூஜைகளும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கருணாம்பிகை அம்மன் சன்னதியின் முன்புறமுள்ள ஐந்து நிலை ராஜகோபுரத்திற்கு மராமத்து செய்து வண்ணம் தீட்டும் வேலை நடைபெறுகின்றது. இதற்காக, நேற்று மாலை 6 மணிக்கு ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கோவை ராமானந்தா அடிகளார் பவுண்டேஷன் சார்பில்,திருப்பணிகள் துவங்குவதற்காக பாலாலயம் நடைபெற்றது. இதில், பெங்களுரூ வாழும் கலை வேத பாடசாலை முதல்வர் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில், திருப்பக்கொழியூர் வாகீசர் மடாலயம் காமட்சி தாச சாமிகள், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்கள், செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் மற்றும் உபயதாரர்கள் கலந்து கொண்டனர். மேலும் வரும் 24ம் தேதி காலை 7 மணி முதல் 9 மணிக்குள், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்கான திருப்பணிகள் துவங்குவதற்கான பூஜைகள் நடைபெறுகின்றது. இதற்கான ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்தனர்.