சிங்கம்புணரி: சிங்கம்புணரி பகுதியில் திரியும் கோயில் மாடுகளுக்கு இரையாக வைக்கோல் குவியத் தொடங்கியுள்ளன.
இங்குள்ள சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலுக்கு பக்தர்கள் ஏராளமான மாடுகளை நேர்த்தி கடனாக விடுகின்றனர். பராரியாய் சுற்றி திரியும் இம்மாடுகள் இரை கிடைக்காமல் அவதிப்படுகின்றன. சில ஆண்டுகளாக கோயில் முன்பாக கோசாலை அமைக்கப்பட்டு நோய்வாய்ப்பட்ட மாடுகள், சில கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றிற்கு பக்தர்கள் அன்பளிப்பாக வைக்கோல் உள்ளிட்ட தீவனங்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்தாண்டு நல்ல மழை பொழிந்து விளைச்சல் திருப்தியாக இருந்ததால் பல இடங்களில் வைக்கோல் அதிகளவில் கிடைத்தது. பலர் லாரிகளில் வைக்கோலை கொண்டு வந்து கோசலைக்கு அன்பளிப்பாக வழங்கி வருகின்றனர். சில விவசாயிகள் தங்கள் வயல்கள் கிடைத்த எஞ்சிய வைக்கோலை கோயில் முன்பாக திரியும் மாடுகளுக்கு தீவனமாக கொட்டியும் செல்கின்றனர். இதனால் இக்கோயில் மாடுகளுக்கு இந்தாண்டுக்கான இரை போதுமான அளவில் கிடைத்து வருகிறது. அதே நேரம் சுற்றுவட்டாரத்தில் திரியும் ஆயிரக்கணக்கான இக்கோயில் மாடுகளை சம்பந்தப்பட்டவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டதால் அவை விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை வீணாக்கி வருகின்றன. இதனால் பலர் விவசாயம் செய்ய முடியாது நிலைக்கு தள்ளப்பட்டனர். ஒரு சிலர் முள்வேலி தடுப்புகள் அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர். எனவே கோயில் மாடுகள் அனைத்தையும் தனி இடத்தில் வைத்து பராமரிக்க விவசாயிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.