பதிவு செய்த நாள்
15
மார்
2023
08:03
மணவாளக்குறிச்சி: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது. நிசப்தமான சூழலில் அம்மனுக்கு பதார்த்தங்கள் படையலிடப்பட்டது. ஒடுக்கு பூஜை ஐதீகம் பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா கடந்த 5ம் தே தி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10ம் நாளான நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பவனி, 1 மணிக்கு ஒடுக்கு பூஜை நடந்தது.
ஒடுக்கு பூஜை என்பது பசியுடன் வந்து உணவு கேட்ட கேரள வியாபாரிகளுக்கு அறுசுவை உணவளித்த அம்மனுக்கு, அந்த நிகழ்வை நினைவூட்டும் விதத்தில் பக்தர்களால் வழங்கப்படும் அறுசுவை உணவே ஒடுக்கு பூஜை என கூறப்படுகிறது . கோவில்களில் படை க்கப்படும் நைவேத்தியங்கள் அனைத்தும் பச்சரிசியால் தயாரிக்கப்படும் நைவேத்தியங்களே. ஆனால் , ஒடுக்கு பூஜையில் மட்டும் அம்மனுக்கு படைக்கப்படும் சோறு புழுங்கல் அரிசியில் தயாரிக்கப்படுகிறது. கேரள உணவு பதார்த்தங்கள் மே லும், அப்பூஜைக்கு படைக்கப்படும் அனைத்து பதார்த்தங்களும் கேரள கலாசாரப்படி சுபநிகழ்ச்சிகளில் தயாரிக்கப்படும் உணவு பதார்த்தங்களே ஆகும்.
ஒடுக்கு பூஜைக்கு சோறு, பருப்பு, சாம்பார், புளிசேரி (மோர் குழம்பு), ரசம், மோர் என ஐந்து கறிகளும், அவியல், துவரன் (பொரியல்), கிச்சடி, பச்சடி, கூட்டுகறி (உருளை கிழங்கு வடை கறி), வாழைக்காய் வறுவல் மற்றும் ஊறுகாய் என ஏழு வகை கூட்டுமாக பதார்த்தங்கள் ஒடுக்கு பூஜையில் இடம் பிடித்து இருக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒருவராக 13 பேர் மண்கலத்தையும், ஒரு ஓலைப்பெட்டியில் அப்பளம் மற்றும் ஒரு ஓலைப்பெட்டியில் உணவு பரிமாறுவதற்கு தேவையான அகப்பை, இலை போன்ற சாதனங்களுமாக இருவரும், மொத்தம் 15 பேர் தலையில் சுமந்து ஒரே வெள்ளைத்துணியால் மூடி சிறு சப்தத்துடனான மேளம் அடித்து கண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து பவனியாக அம்மன் சன்னதியை வந்துஅடைந்தது. நிசப்தம் இந்த பதார்த்தங்கள் அனைத்தும் கோவிலை அடைந்ததும் கோவில் நடை சாத்தப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்கு வெளியே பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்காலங்களில் ஆடு, மாடு மற்றும் கோழிகள் பலி கொடுக்கபட்டது. ஆனால் , அண்மை காலமாக மஞ்சள் சுண்ணாம்பு கலந்து வைக்கப்படும் தடியங்காய் பலி கொடுக்கப்படுகிறது. இந்த பலி கொடுக்கும் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தில் இருந்து எந்தசப்தமும் இன்றி நிசப்தமான சூழல் காணப்படுவது அதிசயமான ஒன்று. பலி நிகழ்ச்சி முடிந்து உடுக்கை சப்தம் கேட்ட பின்பே குழந்தை அழும் குரல் கூட கேட்கத்து வங்கியது. அதன்பின் மேளதாளம் முழங்க தீபாராதனை நடந்தது. தொடர்ந்து திருக்கொடி இறக்கப்பட்டது. ஒடுக்கு என்றால் மலையாளத்தில் ஒடுக்கம் என பொருள்படும். ஒடுக்கம் நடக்கும் பூஜை என்பது மருவி ஒடுக்கு பூஜையானது விழாவின் கடைசியாக நடக்கும் பூஜையையே ஒடுக்கு பூஜை என கூறுகின்றனர்.