பதிவு செய்த நாள்
18
மார்
2023
03:03
கருமத்தம்பட்டி: மோப்பிரிபாளையம் ஸ்ரீ வேலாத்தாள் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
கருமத்தம்பட்டி அடுத்த மோப்பிரி பாளையத்தில் உள்ள ஸ்ரீ வேலாத்தாள் கோவில் பழமையானது. கொங்கு வேளாளர் சமுதாய தூரன் குலத்துக்கு பாத்தியமான இக்கோவிலில் வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன. பணிகள் முடிவுற்று, கடந்த, 15 ம்தேதி அதிகாலை, 5:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மதியம், வாகராயம் பாளையம் கிழக்கு பிள்ளையார் கோவிலில் இருந்து தீர்த்தக் குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. மாலை முதல்கால ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. 16 ம்தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால ஹோமங்கள், திருமேனி பிரதிஷ்டை செய்து அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. நேற்று, அதிகாலை, 4:30 மணிக்கு, நான்காம் கால ஹோமம், பூர்ணாகுதி முடிந்து, புனித நீர் கலசங்கள் மேள தாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. 6:30 மணிக்கு, பரிவாரங்கள் மற்றும் மூலஸ்தான விமானத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. 7:00 மணிக்கு ஸ்ரீ வேலாத்தாள் அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து மகா அபிஷேகம் அலங்கார பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது.