பதிவு செய்த நாள்
17
செப்
2012
10:09
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளி காப்பு அணிவித்தனர். இரவு, 12:00 மணிக்கு, அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில், ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு நடந்த, ஊஞ்சல் உற்சவத்தின் போது அம்மன் பக்தி பாடல், தாலாட்டு பாடல்களைப் பாடினர். ஊஞ்சல் உற்சவத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம், அமாவாசை உற்சவத்தில் மழையின்போதும் லட்சக்கணக்கில் கூட்டம் இருந்தது. இந்த மாதம் அதை விட கூடுதலாக கூட்டம் இருந்தது. இதனால் ஊஞ்சல் உற்சவம் முடிந்து வெளியே வருவதற்கு, ஒரு மணி நேரம் வரை ஆனது.