திருப்புளியங்குடி பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழா கருடசேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2023 09:03
ஸ்ரீவைகுண்டம்: திருப்புளியங்குடி காய்சினிவேந்தப் பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழா கருடசேவை நடந்தது. ஸ்ரீவைகுண்டம் அருகே திருப்புளியங்குடியில் நவதிருப்பதிகளில் 3வது ஸ்தலமாக காய்சினிவேந்தப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. திருவிழாவில், 5ம் திருவிழாவான நேற்று காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபமும், 6.30 மணிக்கு திருமஞ்சனம், நித்தியல் கோஷ்டி நடந்தது. தொடர்ந்து, காலை 9 மணிக்கு சயன குரடு மண்டபத்தில் உற்சவர் காய்சினிவேந்தப் பெருமாள் தாயார்களுடன் எழுந்தருளினார். பின்னர் 11 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதனைத்தொடர்ந்து, இரவு 9 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி காய்சினிவேந்தப் பெருமாள் திருவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.