பதிவு செய்த நாள்
17
செப்
2012
11:09
பொள்ளாச்சி: விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தில், அசம்பாவிதம் ஏதும் இன்றி அமைதியான முறையில் நடக்க ஒத்துழைப்பு தர வேண்டும், என, ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில், சப்-கலெக்டர் ரஞ்சனா தலைமையில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா ஆலோசனை கூட்டம் நடந்தது. பொள்ளாச்சி போலீஸ் டி.எஸ்.பி., மாடசாமி, தாசில்தார் ஸ்டெல்லா ராணி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், விஸ்வ இந்து பரிஷத், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அதிகாரிகள் பேசியதாவது: பொள்ளாச்சியில் கடந்தாண்டு ஊர்வலம் நடந்த வழித்தடங்களிலே இந்தாண்டும் ஊர்வலம் நடத்தப்படும். ஊர்வலத்தின் போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரும் நடந்து கொள்ளக்கூடாது. பல்வேறு அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யும் விநாயகர் சிலைகள், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் களிமண் கொண்டு உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு அமைப்புகள் பிரதிஷ்டை செய்யும் சிலைகள், விசர்ஜனம் செய்யும் தேதிகள் குறித்த விபரங்களை போலீசாருக்கும், வருவாய் துறையினருக்கும் தெரிவிக்க வேண்டும். பிரதிஷ்டை செய்வது முதல் விசர்ஜன ஊர்வலம் முடியும் வரை, சிலைகளுக்கு அருகில் அந்தந்த அமைப்பை சார்ந்த ஒருவரை பாதுகாப்புக்கு நியமிக்க வேண்டும். ஊர்வலத்தில் போது சர்ச்சைக்குரிய வாசகங்களை கோஷமிடக்கூடாது. போலீசார் அறிவித்துள்ள வழித்தடங்களில் குறித்த நேரத்திற்குள் சிலைகளை கொண்டு வர வேண்டும். ஊர்வலம் நடக்கும் பகுதிகளில் மோசமான ரோடுகளை, நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வேண்டும். ஊர்வலத்தில், பயன்படுத்தும் வாகனங்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். பொதுமக்களும் ஊர்வலத்தில் பங்கேற்கும் வாய்ப்புள்ளதால், அனுபவமும், லைசென்ஸ், வாகன இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை சரியாக வைத்திருக்கும் டிரைவர்கள் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும். அம்பராம்பாளையம், ஆனைமலை பகுதிகளிலுள்ள ஆழியாறு ஆற்றில் விசர்ஜனம் நடக்கும் நாட்களில், தண்ணீர் அதிகளவு திறந்து விடாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் அமைதியான முறையில் நடக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும். ஊர்வலத்தில், பாதுகாப்பு ஏற்பாடாக 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு, அதிகாரிகள் பேசினர்.