பதிவு செய்த நாள்
17
செப்
2012
11:09
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி தேரோட்ட விழா வெகு விமர்சையாகவும், கோலாகலமாகவும் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுள்ள மூலஸ்தான மாரியம்மன் புற்றுமண்ணால் ஆனது. அதனால் மூலஸ்தான அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவது இல்லை. மாறாக, தைலக்காப்பு சாற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. விஷ்ணு துர்க்கைக்கும், அம்பாள் உற்சவ மூர்த்திக்கும் தினமும் அபிஷேகம் நடத்தப்படும். மாரியம்மன் கோவில் நிர்வாகம், தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின்கீழ் இயங்கி வருகிறது. இங்கு ஆவணி பெருந்திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படும். அதன்படி, நடப்பாண்டு ஆவணி பெருவிழா, கடந்த மாதம், இரண்டாம் தேதி பந்தக்கால் முகூர்த்தத்துடன் துவங்கியது. பத்தாம் தேதி கொடியேற்றமும், முத்துப்பல்லக்கு விழாவும், தொடர்ந்து பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.ஆவணி, ஐந்தாம் வாரத்தையொட்டி, நேற்று தேரோட்டம் வெகுவிமர்சையாகவும், கோலாகலமாகவும் நடந்தது. இதில் கோவில் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, ஹிந்துசமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஞானசேகரன், கண்காணிப்பாளர்கள் அசோகன், அரவிந்தன், குணசேகரன் ஆகியோர் தலைமையில், சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த ஆண், பெண் பக்தர்கள் திரளாக பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி ஐதீகப்படி உடம்பில் கட்டி, மரு, பரு தோன்றிய பக்தர்கள், கோவிலின் உள்புறத்தில் அமைந்துள்ள வெல்லக்குளத்தில் அம்மனை வேண்டி, வெல்லத்தை வாங்கி வந்து, இந்தக்குளத்தில் இட்டனர். இதன்மூலம் நீரில் வெல்லம் கரைந்து மாயமாவது போல, கட்டி, பருக்களும் மறைந்து விடும் என்பது அவர்களின் நம்பிக்கையாகும். ஏற்பாட்டை அரண்மனை தேவஸ்தான பணியாளர்கள், ஹிந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.