பதிவு செய்த நாள்
21
மார்
2023
10:03
தொண்டாமுத்தூர்: பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பக்தர்களின் வசதிக்காக, 2.20 கோடி ரூபாயில் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலையொட்டி உள்ள மலைத்தொடரின் ஏழாவது மலை உச்சியில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசிக்க, ஆண்டுதோறும், பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏறி வருகின்றனர். இந்நிலையில், அடர் வனப்பகுதிக்குள் கோவில் அமைந்துள்ளதால், அடிவாரத்தில் உள்ள கோவிலில், பக்தர்களின் வசதிக்காக, 2.20 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு திட்டப்பணிகள் துவங்க உள்ளது. இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில்,"பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பக்தர்களின் வசதிக்காக, 37.8 லட்சத்தில் பொருட்கள் பாதுகாப்பு அறை, காலணிகள் பாதுகாப்பு அறையும், 73.3 லட்சத்தில், பக்தர்கள் ஓய்வு எடுக்கும் மண்டபமும், 19.6 லட்சத்தில் மருத்துவ மைய கட்டடமும், 88.8 லட்சத்தில் முடி காணிக்கை மண்டபமும் கட்டதிட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் மருத்துவ மையம் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. ஓய்வு மண்டபம் மற்றும் முடி காணிக்கை மண்டபம் கட்டும் பணிகளுக்கு, இந்த வாரத்தில் டெண்டர் விடப்படும்,"என்றனர்.