தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா ஆலோசனைக் கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2023 06:03
தாயமங்கலம்: இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவிற்கான அரசு அதிகாரிகள் போலீசார்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
இளையான்குடி அருகே பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா வருடந்தோறும் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து முடிகாணிக்கை,தீச்சட்டி,கரும்பு தொட்டில் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.இந்தாண்டுக்கான பங்குனி பொங்கல் விழா வருகிற 29ம் தேதி இரவு 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்.5ந் தேதியும்,மின் அலங்கார தேர்பவனி 6 ந் தேதி இரவும் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த வருடம் நடைபெறும் பங்குனி பொங்கல் விழாவை சிறப்பான முறையில் நடத்துவது மற்றும் சுகாதாரப் பணிகள்,காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அசோக்குமார் தலைமையில் நடந்தது.இக்கூட்டத்தில் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள், மருத்துவத்துறை அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருவிழாவை சிறப்பான முறையில் நடத்துவது மற்றும் பக்தர்களுக்கு தேவையான சுகாதார பணிகளை செய்வது, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தீயணைப்பு துறையினரின் சார்பில் முன்னெச்சரிக்கை பணிகள் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டன.