பதிவு செய்த நாள்
25
மார்
2023
08:03
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் ஸ்ரீவாரி வேங்கடாசலபதி சுவாமிக்கு வெள்ளிக்கிழமைதோறும் சிறப்பு திருமஞ்சனம் சேவை துவக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அடுத்த பஞ்சவடீ ஷேத்திரம் மத்திய திருப்பதி என அழைக்கப்படுகிறது. இங்குள்ள பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமி கோவிலில் ஸ்ரீவாரி வேங்கடாசலபதி சுவாமி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். ஸ்ரீவாரி வேங்கடாசலபதி சுவாமிக்கு, திருப்பதியில் நடைபெறுவதை போலவே, வெள்ளிக்கிழமைதோறும் சிறப்பு திருமஞ்சனம் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் துவக்க பஞ்சவடீ கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதன் தொடக்கமாக, நேற்று (24ம் தேதி) அதிகாலை 5:௦௦ மணிக்கு, திருமலை திருப்பதி தலைமை பட்டாச்சாரியார் வேணுகோபால் தீக்சிதலு சுப்ரபாத சேவையை துவக்கி வைத்தார். சுவாமிக்கு தோமாலை சேவை, அர்ச்சனை போன்ற சேவைகள் வைகாநஸ ஆகமப்படி நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீவாரி வேங்கடாசலபதி சுவாமிக்கு மங்கள திரவியங்களால் விசேஷ திருமஞ்சன சேவை, வேத பாராயணத்துடன் விமர்சையாக நடந்தது. திருமஞ்சனத்திற்கு பின் விசேஷ வாசனை புஷ்பங்களால் தொடுக்கப்பட்ட மாலைகளால் அலங்காரம் செய்து, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட விசேஷ தளிகை சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்டது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஸ்ரீவாரி வேங்கடாசலபதி சுவாமிக்கு திருமஞ்சனமும், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் விசேஷ சேவைகளையும் செய்ய விரும்பும் பக்தர்கள், பஞ்சமுக ஸ்ரீஐயமாருதி சேவா ட்ரஸ்டை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.