பதிவு செய்த நாள்
26
மார்
2023
03:03
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப். 8ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
கொடியேற்றம்: இன்று காலை யானை தெய்வானை மீது கொடிப்பட்டம் ரத வீதிகளில் கொண்டு செல்லப்பட்டு கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டது. காலை 8:00 மணிக்கு சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் காலை 8:18 மணிக்கு பங்குனி திருவிழாவிற்கான கொடியேறினர். கொடிக்கம்பத்தின் அடிப்பகுதியில் அபிஷேகங்கள் முடிந்து தீபாராதனை நடந்தது. திருவிழா நம்பியார் ரமேஷ் சிவாச்சாரியாருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. முதல்முறையாக கொடிக்கம்பத்தை சுற்றிலும் மண்டபத்தில் உபயதாரர்மூலம் வண்ண பூக்களால் தோரணம் கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.
சுவாமி புறப்பாடு: திருவிழா நடைபெறும் ஏப். 10 வரை காலையில் தங்க சப்பரம், தங்கப்பல்லக்கிலும், மாலையில் தங்கமயில், தங்க குதிரை வெள்ளி பூதம், வெள்ளி ஆட்டுக் கிடாய், அன்னம், சேஷம், வெள்ளி யானை, பச்சை குதிரை வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அருள்பாலிப்பர்.
திருக்கல்யாணம்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக ஏப். 1 இரவு 7:00 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி கைபாரம் நிகழ்ச்சியும், ஏப். 2ல் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, ஏப். 3 காலையில் கங்காளநாதர், இரவு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, நடராஜர், சிவகாமி அம்பாள் புறப்பாடு, ஏப். 4ல் பச்சைக்குதிரை ஓட்டம். ஏப். 5ல் பங்குனி உத்திரம், ஏப். 6ல் சூரசம்ஹார லீலை நடக்கிறது, ஏப். 7ல் பட்டாபிஷேகம், ஏப். 8ல் திருக்கல்யாணம், ஏப்.9ல் தேரோட்டம், ஏப். 10ல் தீர்த்த உற்சவம் நடக்கிறது.
பக்தர்கள் வேதனை: குன்றத்து கோயிலில் நடக்கும் திருவிழாக்களில் பங்குனி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இத்திருவிழாவிற்காக சில தினங்களுக்கு முன்பு கோயில் வாசலில் பந்தல் போடப்பட்டது. அந்த பந்தல்கால்களில் நெட்லிங் இலைகள் கட்டப்பட்டிருந்தது. சாதாரணமாக சுப காரியங்களுக்கு போடப்படும் பந்தலில் வாழைமரம் கட்டப்படுகிறது. ஆனால் மிகப்பெரிய திருவிழாவிற்காக போடப்பட்ட இந்த பந்தலில் ஒரு இடத்தில் கூட வாழைமரம் கட்டப்படாதது வேதனை அளிக்கிறது என பக்தர்கள் தெரிவித்தனர்.