ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் சீதா ராமர் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2023 03:03
சோழவந்தான்: சோழவந்தானில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் 11 நாள் பங்குனி ப்ரம்மோற்சவ விழாவில் சீதாராமர் திருக்கல்யாண வைபோகம் நடந்தது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான 7ம் நாள் திருவிழாவில் ஸ்ரீராமசந்திரமூர்த்திக்கும் சீதாபிராட்டிக்கும் திருக்கல்யாண வைபோகம் நடந்தது. இவ்விழாவில் மாப்பிள்ளை வீட்டாராக பாலாஜி பட்டரும், பெண் வீட்டாராக ஸ்ரீபதி பட்டரும் இருந்து, பெருமாளின் அவதாரமான ஸ்ரீராமசந்திரருக்கும், சீதா பிராட்டிக்கும் ராமனின் பக்தர் ஆஞ்சநேயர் முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் நடத்தினர். முன்னதாக, மண்டகபடிதாரர் சௌந்தரியம்மாள், லலிதா உட்பட பொதுமக்கள் மேளதாளம், அதிர்வேட்டு முழங்க சீர்வரிசையை சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். இக்கோயில் வளாகத்தினுள் ஸ்ரீராமசந்திரருக்கும், சீதா பிராட்டிக்கும் பட்டர்கள் ஆடி வந்து மாலை மாற்றும் நிகழ்வு நடந்தது. இதையடுத்து சுவாமி சமேதராய் கன்னி ஊஞ்சாலாடினர். இத்திருக்கல்யாண விழாவில் ஜெனகை மாரியம்மன் கோயில் அர்ச்சகர்கள், நிர்வாகிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். செயல் அலுவலர் சுதா, தக்கார் அங்கயற்கண்ணி, கணக்கர் முரளிதரன் ஆகியோர் இவ்விழா ஏற்பாட்டினைச் செய்தனர். தொடர்ந்து சன்னதி வீதி நண்பர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். கோயில் நிர்வாகத்தினரிடம் மொய் எழுதி சீதாராமன் கல்யாணத்தை சிறப்பித்தனர் பொதுமக்கள். இதைத்தொடர்ந்து மாலை சூர்ணாபிஷேகமும், இரவில் அலங்கார வண்ணரதத்தில் வீதியுலா புறப்பாடு நடந்தது. இதையடுத்து மார்ச் 30ல் ராமநவமி நடைபெறும்.