புதூர் : மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் புரட்டாசி தெப்ப உற்சவ திருவிழா, செப்.,18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைமுன்னிட்டு அங்குரார்பணம் நடந்தது. செப்.,18 காலை கொடியேற்ற வைபங்கள் நடந்தன. மூலவருக்கு அபிஷேகங்கள், உற்சவருக்கு ஆராதனைகள் நடந்தன. அனுமன் உருவம் பொறிக்கப்பட்ட கொடி மேள, தாளம் முழங்க பல்லக்கில் கோயிலை சுற்றி எடுத்து வரப்பட்டது. காலை 8.45 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இரவு அன்ன வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள் தல்லாகுளம் பகுதியில் வலம் வந்தார். தெப்ப உற்சவம் செப்., 28ம் தேதி நடக்கிறது. அன்று காலை ஒரு முறையும், மாலையில் இரு முறையும் தெப்பத்தை சுற்றி பெருமாள் எழுந்தருளுகிறார். மறுநாள் உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், துணை கமிஷனர் செல்வராஜ் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.