பதிவு செய்த நாள்
01
ஏப்
2023
11:04
பரமக்குடி: பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் ராமநவமி விழாவையொட்டி, சீதாராமர் திருக்கல்யாணம் நடந்தது.
இக்கோயிலில் மார்ச் 22 அன்று காலை ராமர் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கருட கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அன்று முதல் ராமர் வாமன அவதாரம், காளிங்க நர்த்தனன், பாண்டுரங்கன், கூடழலகர், கள்ளழகர், கண்ணன், இரண்டு கருட சேவைகளில் சேவை சாதித்தார். மார்ச் 29 அன்று புத்திர காமேஷ்டி யாகம் பாயாச கட்டளை விழா நடந்தது. தொடர்ந்து மார்ச் 30 ஸ்ரீ ராம நவமி கொண்டாடப்பட்டது. நேற்று காலை 10:15 மணிக்கு சங்கர மடத்திலிருந்து ராமர் மாப்பிள்ளை திருக்கோலத்தில் எழுந்தருளி, மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடந்தது. பின்னர் 12:00 மணிக்கு மேல் ராமர் சீதை திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து கல்யாண சடங்குகள் நிறைவடைந்து, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு பெருமாள் தாயாருடன் பூ பல்லக்கில் பட்டிணப்பிரவேசம் சென்றார். இன்று காலை 10:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், இரவு 7:00 மணிக்கு ஏக சிம்மாசனத்தில் திருவீதி உலா நடந்து கொடி இறக்கப்படும். தக்கார் நாராயணி, உபயதாரர்கள் மற்றும் அறங்காவலர் குழுவினர் கலந்து கொண்டனர்.