பதிவு செய்த நாள்
02
ஏப்
2023
09:04
கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழாவையொட்டி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா, கடந்த, 27ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் யாகசாலை பூஜையும், சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. பங்குனி உத்திர தேர்த்திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று, அதிகாலை, 5:00 மணிக்கு, நடைதிறக்கப்பட்டு, பட்டீஸ்வரருக்கு, அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு, யாகசாலை பூஜையும், பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலாவும் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, சாயரட்சை பூஜை முடிந்து, யாகசாலை பூஜை, அஷ்டபலிபூஜை நடந்தது. தொடர்ந்து, உற்சவர் சோமாஸ்கந்தர், அம்பாள், பட்டீஸ்வரர், பச்சைநாயகி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதனைத்தொடர்ந்து, மஹா தீபாராதனை நடந்தது. அதன்பின், பஞ்சமூர்த்திகள் திருவீதியுலாவும், சந்திரசேகரர், சவுந்திரநாயகி வெள்ளை யானை சேவையும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பங்குனி உத்திர திருவிழாவின், முக்கிய நிகழ்வான, தேர் வடம் பிடித்தல், இன்று மாலை, 3:30 மணிக்கு நடக்கிறது.