பதிவு செய்த நாள்
02
ஏப்
2023
09:04
சென்னை, மயிலை கபாலீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் மாடவீதிகளை வலம் வந்து, மயிலை சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனிப் பெருவிழா கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 30ம் தேதி அதிகார நந்தி சேவை நடந்தது.
நேற்று முன்தினம் காலை வெள்ளி புருஷா மிருகம், சிங்கம், புலி வாகனங்களில் சுவாமி காட்சியளித்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, நாகம், காமதேனு, ஆடு வாகனங்களின் புறப்பாடு நடந்தது. நேற்று காலை சவுடல் விமானப் புறப்பாடு நடந்து. இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி அருள்பாலித்தார். நாளை, தேர் திருவிழா நடக்கிறது. காலை 6:30 மணிக்கு தேரில் எழுந்தருள்கிறார். காலை 7:25 மணிக்கு பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்படுகிறது.
இன்று தேர் திருவிழா; திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி அருள்பாலித்தார். நேற்று இரவு, யானை வாகனத்தில் இறைவன் காட்சி அளித்தார். இன்று நடக்கும் தேர்திருவிழாவை முன்னிட்டு, காலை 6:00 மணிக்கு சந்திரசேகரர் தேரில் எழுந்தருளி பிரம்மனுக்கு காட்சியருளல் நடக்கிறது. அதைத் தொடர்ந்து பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்படுகிறது. இன்று இரவு தியாகராஜர் வீதி உலா நடக்கிறது. வரும், 4ம் தேதி கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் நடக்கிறது.