பதிவு செய்த நாள்
02
ஏப்
2023
06:04
பேரூர் பட்டீசுவரர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று மாலை நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும், பேரூர் பட்டீசுவரர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா 10 நாள் உற்சவமாக வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். இந்தாண்டு, பங்குனி உத்திர தேர்த்திருவிழா, கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, மாலை யாகசாலை பூஜையும், காலைதோறும் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும், யாகசாலை பூஜைகளும் நடந்தது.நேற்று, சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதைத்தொடர்ந்து, சுவாமி, வெள்ளை யானை வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, இன்று காலை 8மணிக்கு மேல், பட்டாடை, அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட பட்டீசுவரர், பச்சைநாயகி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள், தனித்தனி தேரில் எழுந்தருளினர். இதையடுத்து, முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி இன்று மாலை, 4:30 மணிக்கு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் வடம் பிடித்து, பேரூரா...பட்டீசா... என்ற கோஷத்துடன் தேரை இழுத்தனர். இதைத்தொடர்ந்து, வரும், 4ம் தேதி இரவு தெப்பத் திருவிழாவும், வரும் 5ம் தேதி, யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, அதிகாலை நடராஜருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, பங்குனி உத்திர தரிசன காட்சியும் நடக்கிறது. இறுதியாக, இரவு 8 மணிக்கு கொடியிறக்குதல் நிகழ்ச்சியுடன் விழா முடிகிறது.