பதிவு செய்த நாள்
03
ஏப்
2023
07:04
பேரூர்:பேரூரா, பட்டீசா... கோஷத்தை பக்தர்கள் ஆர்ப்பரித்து முழங்க, பேரூர் பட்டீஸ்வரர் தேரில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா, கடந்த மார்ச் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் யாகசாலை பூஜைகள், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, வாகன உலா நடந்தது. கடந்த 31ம் தேதி இரவு, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி காட்சியளித்தார். திருவிழாவின், ஆறாம் நாளான நேற்று முன்தினம் இரவு, பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன் திருக்கல்யாண உற்சவமும், வெள்ளை யானை சேவையும் நடந்தன. நேற்று, காலை 9:00 மணிக்கு, பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன், விநாயகர், சுப்ரமணியர், நடராஜர் தேர்களில் எழுந்தருளினர். தேரில் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளை பக்தர்கள் தரிசித்தனர். மாலை 4:15 மணிக்கு, பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், தேரை வடம்பிடித்து, இழுத்து துவக்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பேரூரா பட்டீசா கோஷங்களை பரவசத்துடன் முழங்க, ரத வீதிகளில் தேர் வலம் வந்தது. விழாவையொட்டி, பல்வேறு இடங்களில் பக்தர்கள் அன்னதானம், நீர்மோர், பழங்கள் வழங்கினர். தேரோட்டம் காரணமாக, பேரூர், சிறுவாணி ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. நேற்று, 230 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வரும் 5ம் தேதி, பங்குனி உத்திரத்தன்று, நடராஜ பெருமான் திருமஞ்சனம், சுவாமி திருவீதியுலா நடக்கிறது. இரவு, யாகசாலை பூஜை நிறைவடைந்து, கொடியிறக்குதலுடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவடைகிறது.