திருப்புவனத்தில் பங்குனி தேரோட்டம்: வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2023 10:04
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த ஞாயிறு தொடங்கி நடந்து வருகிறது. 9ம் நாளான நேற்று காலை தேரோட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பிரியாவிடை தாயாருடன் புஷ்பவனேஷ்வரரும், சிறிய தேரில் சவுந்தரநாயகி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். காலை பத்து மணிக்கு சிறப்பு பூஜைக்கு பின் தேரடியை விட்டு தேரை பக்தர்கள் சிவசிவ சங்கரா என கோஷமிட்டபடி இழுத்தனர். முன்னதாக சண்டிகேஸ்வரர், விநாயகர் சப்பரங்கள் முன்னால் செல்ல தேர் பின்னால் சென்றது. நான்கு மாட வீதிகளிலும் பெண்கள் வாசலில் கோலமிட்டு சுவாமியையும் அம்மனையும் வரவேற்றனர். தேருக்கு முன்னதாக பெண்கள் கைலாய வாத்தியங்கள் இசைத்தபடி சென்றனர். சிவகங்கை மாவட்ட எஸ்.பி., செல்வராஜ் தலைமையில், மானாமதுரை டி.எஸ்.பி., கண்ணன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உள்ளிட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். தேருக்கு பின்னால் பாதுகாப்பாக தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் வந்தனர். மதியம் 12:30 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. தேர் நிலைக்கு வந்த பின் பழங்கள் சூறை விடப்பட்டன. தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.