பதிவு செய்த நாள்
21
செப்
2012
11:09
ஐதராபாத்: திருமலை, திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு, பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய, பல்வேறு தங்க, வைர நகைகள், கண்காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், பல்வேறு அரிய வகையான மற்றும் விலை மதிக்க முடியாத, தங்க, வைர நகைகளை, பக்தர்கள் காணலாம். திருமலை வெங்கடாஜலபதி கோவிலுக்கு, ஆண்டு தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு, 60 ஆயிரம் பேரும், பண்டிகை மற்றும் இதர விசேஷ நாட்களில், ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்களும் வந்து, சாமி தரிசனம் செய்கின்றனர். நேர்த்திக் கடனாக, தங்கம், வைரம் போன்ற ஆபரணங்களையும் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இந்த காணிக்கை நகைகளின் மதிப்பு மட்டும், 56 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், விஜயநகரப் பேரரசை ஆண்ட கிருஷ்ண தேவராயரும், இந்த கோவிலுக்கு, விலை மதிக்க முடியாத, தங்கம் மற்றும் வைரக் கிரீடங்களை காணிக்கை தந்துள்ளார். அவரைத் தொடர்ந்து, பல்வேறு மன்னர்களும், தங்க, வைர நகைகளை காணிக்கையாக வழங்கி வந்தனர். இந்நிலையில், பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட தங்கம் மற்றும் வைர நகைகளை, பக்தர்களின் பார்வைக்கு வைக்க, திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, சமீபத்தில், டில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்குச் சென்ற, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் சுப்ரமணியம் தலைமையிலான குழுவினர், அங்கு மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர். பின், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை அலுவலர்களுடன், தங்க நகைகளின் கண்காட்சிக்கு, தொழில்நுட்ப ரீதியான பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தனர். திருமலையில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா அருங்காட்சியகத்தில், இந்த கண்காட்சியை நடத்த, தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தற்போது நடந்து வரும், பிரம்மோற்சவ விழா முடிந்த பின், இக்கண்காட்சி துவங்கும்.