பதிவு செய்த நாள்
08
ஏப்
2023
08:04
பழநி: பழநி, கோயில் பங்குனி உத்திர திருவிழா திருஆவினன்குடி கோவிலில் நிறைவு பெற்றது.
பழநி, அடிவாரம், திருஆவினன்குடி கோயிலில், பங்குனி உத்திர திருவிழா மார்ச்.29., துவங்கியது. திருவிழாவில் ஏப்.,4 வரை தந்த பல்லாக்கில் சுவாமி, கிரிவீதி உலா நடைபெற்றது. ஏப்.,3ல் மாலை வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. அன்று இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு சன்னதி வீதி, கிரி வீதியில் நடந்தது.பங்குனி உத்திர தினமான ஏப்..4.,ல் கிரிவீதியில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, தங்கமயில், வெள்ளி யானை வாகனங்களில் சுவாமி புறப்பாடு தினமும் நடைபெற்றது. குடமுழுக்கு நினைவரங்கத்தில் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நேற்று ஏப்.7., காலை திருஆவினன்குடி கோவிலில் திரு ஊடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் முருகன், வள்ளியை மணமுடித்ததால் தெய்வானை புதுச்சேரி சப்பரத்தில் இருந்து தனிபல்லக்கில் சென்று கோயில் நடைசாற்றும், திரு ஊடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் வீரபாகுவாக ஓதுவார்கள் சென்று சமரசம் செய்தபின் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. இரவு, கொடி இறக்குதல் நடைபெற்று, தங்க குதிரை வாகனத்தில் சுவாமி பெரிய நாயகி அம்மன் கோயிலுக்கு எழுந்தருளல் நடைபெற்றது. பங்குனி உத்திர உற்ஸவம் நிறைவு பெற்றது. நிறைவு நாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் கொடுமுடி, காவிரி நதியிலிருந்து புனித நீரை தீர்த்தக்காவடிக்கு எடுத்து வந்த பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வின்ச், ரோப் கார், தரிசன வரிசையில் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.