பதிவு செய்த நாள்
08
ஏப்
2023
06:04
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில், வழக்கத்திற்கு மாறாக, காலை முதலே மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
காரணம், புனிதவெள்ளி அரசு விடுமுறை மற்றும் இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை என, தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், பெரும்பாலான பக்தர்கள், தங்களது குடும்பத்துடன் திருத்தணி கோவிலுக்கு வந்து மூலவரை வழிபட்டனர். இது தவிர, திருத்தணியில் கடும் வெயில் கொளுத்தியது. இருப்பினும், பக்தர்கள் தேர்வீதியில் கடும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். சில பக்தர்கள் வெயில் தாங்க முடியாமல், தலையில் துணியை போட்டுக் கொண்டு வரிசையில் நின்றனர். பொது வழியில், மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசனம் செய்தனர். அதே போல், நுாறு ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள், இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். முன்னதாக, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது, பின், மூலவருக்கு தங்க கிரீடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ்தமிழ்மாறன் தலைமையில், 15க்கும் மேற்பட்ட போலீசார், மலைக்கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.