கடற்கரையில் கருங்கல் சுவாமி விக்ரகங்கள்: தாசில்தார் விசாரணை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2023 06:04
மயிலாடுதுறை: சீர்காழி அருகே கடற்கரையில் கிடந்த கருங்கல் சுவாமி விக்கிரகங்களை போலீசார் உதவியுடன் தாசில்தார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் கடந்த சில நாட்களாக 2 அடி, ஒரு அடி உயரமுள்ள 2 பெருமாள் விக்ரகங்கள், ஒன்றரை அடி உயரமுள்ள தாயார் விக்ரகம் என மூன்று கருங்கல் விக்கிரகங்கள் கடற்கரையில் கிடந்துள்ளன. விடுமுறை தினமான நேற்று(ஏப்ரல் 07) கொடியம்பாளையம் கடற்கரைக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் சிலைகளை பார்த்துவிட்டு அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதையடுத்து சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் நேற்று இரவு கொடியம்பாளையம் கடற்கரைக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு மூன்று சுவாமி விக்கிரகங்கள் கடற்கரை மணலில் கிடப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த சுவாமி விக்கிரகங்களை போலீசார் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் தாசில்தார் செந்தில்குமார் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகிறார்.