கோவில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதாது; உயர் நீதிமன்ற மதுரை கிளை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2023 06:04
மதுரை: ’கோவில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மூலம் கண்ணியமான குடும்ப வாழ்க்கை நடத்த முடியாத நிலை உள்ளது’ என கருத்து பதிவிட்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, மன்னார்கோவில் ராஜகோபாலசுவாமி குலசேகர ஆழ்வார் கோவில் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் இதர பலன்கள் வழங்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது.
அம்பாசமுத்திரம் மன்னார்கோவில் ராஜகோபாலசுவாமி குலசேகர ஆழ்வார் கோவில் அர்ச்சகர் பெரியநம்பி நரசிம்ம கோபாலன் தாக்கல் செய்த மனு: கோவில்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள விகிதங்களை மாற்றி அமைத்து தமிழக அறநிலையத்துறை 2019ல் அரசாணை வெளியிட்டது. இதன் மூலம் ஒவ்வொரு கோவிலிலிருந்தும் கிடைக்கும் வருவாய் அடிப்படையில் அர்ச்சகர், மணியம், பேஷ்கார், ஓதுவார், தவில், நாதஸ்வரம் மற்றும் கோவில் இதர ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் மறுக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிக்க வேண்டும். சம்பள நிர்ணயத்தை மறு சீரமைக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அறநிலையத்துறை தரப்பில், ’ஒவ்வொரு கோவிலும் வருமானம் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி: மனுதாரரின் நிலை பரிதாபத்திற்குரியது. கோவில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மூலம் கண்ணியமான குடும்ப வாழ்க்கை நடத்த முடியாத நிலை உள்ளது.
கோவில்கள் நம் கலாசாரத்தின் ஒரு அங்கம். அவை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான நிலப்பரப்பைக் கொண்டுள்ளன. தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கோவில்கள் உள்ளன. அவற்றை பராமரிப்பது கோவில் பணியாளர்களால் மட்டுமே சாத்தியப்படும். மன்னார்கோவில் ராஜகோபாலசுவாமி குலசேகர ஆழ்வார் கோவில் பராமரிப்பிற்காக மனுதாரர் மற்றும் பிற ஊழியர்கள் சேவை செய்கின்றனர். ஊழியர்களுக்கு முறையான சம்பளம் வழங்கப்படுவதை உறுதி செய்ய அரசு கடமைப்பட்டுள்ளது. மன்னார்கோவில் ராஜகோபாலசுவாமி குலசேகர ஆழ்வார் கோவிலுக்கு அரசாணை பொருந்தாது. மனுதாரர் மற்றும் அக்கோவிலின் இதர ஊழியர்களுக்கு சம்பளம், இதர பலன்கள் வழங்குவது குறித்து அறநிலையத்துறை தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதிய சட்டம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.